Thursday, 10 December 2015

எதையும் மறுக்க வேண்டாம்.

சென்னை நிலவரம் அறிந்துகொள்ள சென்னையில் உள்ள  யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தொடர்பு கொள்ள முடிந்த ஒரு சில பதிவர் அன்பர்களிடம் பேசிகொண்டிருக்கிறேன். அவ்வாறு நேற்று மாலை ஒரு பதிவருக்கு அலைபேசியில் அழைத்த போது யாருடனோ வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்., ஒட்டுகேட்பது தவறுதான், நாகரிகம் இல்லாத செயல்தான் ஆனால் எனக்கு வேறு வழியில்லை. அழைப்பை துண்டித்தால் மீண்டும் தொடர்பு கொள்ள இயலாமல் போய் விடுமோ? அவர் தொடர்பு கொள்ள அவரது தொலைபேசியும், வேலை நிறுத்தம் செய்தால் என்ன செய்வது என்று காத்திருந்தேன். இடையிடையே ஹலோ ஹலோ என்று அழைத்து பார்த்தேன்.

இதெல்லாம் ஓரிரு நிமிடங்களில் முடிந்துவிட்டது. கடைசியில் அவர் கவனம் அலைபேசி பக்கம் திரும்பியதும் பேசினார். அப்போது பேசியதில் அவரது வீட்டிற்கு யாரோ நிவாரண பொருட்களை கொண்டு வந்து தர முன்வந்ததாகவும் தமக்கு அவை வேண்டாம் என்றும் மறுத்ததாகவும் சொன்னார். மேலும் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவை போய் சேர்வதுதானே முறை என்றும் சொன்னார். மனம் நெகிழ்ந்தேன்.

இவர்போன்ற தன்னலம் கருதா உள்ளங்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள்.

தயவு செய்து உங்களை தேடி வந்து தரும் பொருட்களையோ உணவு பண்டங்களையோ யார் கொடுத்தாலும் அது அரசோ தனியார் நிறுவணங்களோ தனி நபரோ யாராக இருந்தாலும் மறுக்காதீர்கள். காரணம் அவர்கள் தருவது வெறும் பொருட்களல்ல உங்கள் முகம் அறியா உறவுகளின் அன்பு அதில் கலந்திருக்கிறது. அதை மறுப்பதன் மூலம் அவர்களின் அன்பை மறுத்த குற்றத்திற்கு ஆளாகிவிடாதீர்கள்.

மேலும் உங்கள் பகுதியில் ஒரு நான்கு ஐந்து வீடுகளில் வேண்டாமென மறுத்தால் உதவி செய்ய வருபவர்களுக்கு இந்த பகுதியில் யாருக்கும் பாதிப்பில்லை எனும் நினைப்பு வந்து உண்மையாகவே உதவி தேவைப்படும் யாரோ ஒரு குடும்பம் பாதிப்புக்குள்ளாக நேரிடுமே அன்பர்களே.

உங்களுக்கு வேண்டாம் எனும் மன சுத்தத்தை கொடுத்த இயற்கை உங்களிடம் தரும் நிவாரணப்பொருட்களை பெற்று நீங்களே உண்மையில் உதவி தேவைப்படும் நபர்களை தேர்ந்தெடுத்து வழங்கலாமே. அல்லது இவ்வாறு சேரும் பொருட்களை தங்களால் வழங்க இயலாத நிலையில் இந்திய செஞ்சிலுவை சங்கம் போன்ற தொண்டு நிறுவனங்களிடம் சேர்பித்துவிடலாமே..

குஜராத் பூகம்பம் ஏற்பட்ட போது நான் அரக்கோணம் அருகில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் பணிபுரிந்து வந்தேன். அப்போது ஊடகங்களில் கண்ட காட்சிகளால் மனம் பதைத்து உடன் பணிபுரிபவர்களிடம் ஏதாவது செய்யலாமே என்று கேட்டதுதான் தாமதம் சில மணி நேரங்களில் பணியாளர்கள் மட்டும் தருவதாக சொல்லி சென்றவர்கள் கிராமம் முழுவதுமே சுற்றி சுழன்று மூட்டை மூட்டையாய் உணவு பொருட்களும் பெட்டிபெட்டியாய் உடைகளையும் குவித்து விட்டார்கள். பிறகு யாரிடம் சேர்பிப்பது என்ற கேள்வியுடன் முழுமையாய் போய் சேர வேண்டுமே என்ற கவலையும் ஏற்பட்டது.

அந்த நேரம் பார்த்து ஜூனியர் விகடனில் எங்களுக்கு உதவவே ஒரு பெட்டி செய்தி வந்திருந்தது. அதில் நிவாரணப்பொருட்களை பெற்று இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சென்னை கிளை குஜராத்திற்கு அனுப்பி வைப்பதாகவும் அதன் முகவரியையும் வெளியிட்டிருந்து.

அந்த முகவரி
இந்திய செஞ்சிலுவை சங்கம்
பழைய எண் 50 மாண்டியத் சாலை
ஓட்டல் அம்பாசிடர் பல்லவா அருகில்
எழும்பூர்


முகவரியின் மற்ற விவரங்கள் நினைவில் இல்லை.

இந்த முகவரிக்கு அரக்கோணத்தில் ரயில் நிலையத்தில் சேர்த்துவிட்டால் போதுமென்று ஒரு டிராக்டரில் போட்டுக்கொண்டு எங்கள் அலுவலக படையுடன் ஒரு நாள் விடுப்பெடுத்து கிளம்பினோம். ரயில் நிலையத்தில் சென்று சேர்பித்து விட்டு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டுமென்று கேட்டால்......

அங்கிருந்தவர்கள் இத்தகைய பணிகளுக்கு எந்தவிதகட்டணமும் வசூல் செய்வதில்லை என்று  சொல்லி பொருட்களை எடை நிறுத்தி நிவாரண பொருட்களை பெற்றதற்கான அத்தாட்சியை வழங்கி எங்களுக்கு நன்றி சொல்லி உற்சாகப்படுத்தினார்கள்.

இந்த அனுபவம் இன்றும் மனதிற்கு இதமாக உள்ளது.

எனவே தங்களை மீண்டும் வேண்டுகிறேன். யாருடைய அன்பையும் மறுக்காதீர்கள். உங்களால் இயன்றதை செய்யுங்கள்.
எதையும் மறுக்க வேண்டாம்.

7 comments:

 1. உண்மைதான் நண்பரே
  அன்பை மறுக்க வேண்டாம்

  ReplyDelete
 2. // உங்களுக்கு வேண்டாம் எனும் மன சுத்தத்தை கொடுத்த இயற்கை உங்களிடம் தரும் நிவாரணப்பொருட்களை பெற்று நீங்களே உன்மையில் உதவி தேவைப்படும் நபர்களை தேர்ந்தெடுத்து வழங்கலாமே. //

  நண்பரே நல்ல ஆலோசனை.

  ReplyDelete
 3. ஓகே டன்...எங்க பகுதிக்கு யாரும் வரலைப்பா....

  ReplyDelete
 4. சரியாக சொல்லி இருக்கின்றீர்கள் நண்பரே..

  ReplyDelete
 5. யாருடைய அன்பையும் மறுக்காதீர்கள்.
  சிறந்த கருத்துப் பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete
 6. வணக்கம்
  உண்மையான விடயத்தை பகிர்ந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 7. நல்ல ஆலோசனைதான். நமக்கு தேவை இல்லை என்றால் நாமே யாருக்காவது கொடுத்துவிடலாம்

  ReplyDelete